நடிகர் விஜய் ஆண்டனி தனது திரைப்பயணத்தை இசையமைப்பாளராகத் தொடங்கியவர். அதன் பின்னர் நடிப்பிலும் அதிக ஆர்வம் காட்டி, ‘சலீம்’, ‘இந்தியா பாகிஸ்தான்’, ‘பிச்சைக்காரன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனித்துவமான இடத்தை பிடித்தார். குறிப்பாக இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, விஜய் ஆண்டனியை ஒரு முன்னணி ஹீரோவாக உயர்த்தியது. அந்த படத்தில் இடம்பெற்ற ‘நூறு சாமிகள் இருந்தாலும்’ என்ற பாடல் இன்றளவும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படும் பிரபலமான பாடல்களில் ஒன்றாக உள்ளது.
இந்த வெற்றி கூட்டணி தற்போது மீண்டும் இணைந்து புதிய திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. உணர்ச்சிப்பூர்வமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்திற்கு ‘நூறு சாமி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ் மற்றும் காவ்யா அனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து வரும் நிலையில், இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், ‘நூறு சாமி’ திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய விஜய் ஆண்டனி, படத்தைப் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், ‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தை முடித்த பிறகு, அதற்கு சமமான அல்லது அதைவிட சிறந்த கதையை யாராலும் உருவாக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது. ஏனெனில் அந்த படம் என் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான மற்றும் சிறந்த படமாக அமைந்திருந்தது. ஆனால் இயக்குநர் சசி அவர்கள் இப்போது ‘பிச்சைக்காரன்’ படத்தையும் மிஞ்சும் அளவுக்கு ஒரு வலுவான கதையை எழுதியிருக்கிறார்.
இது மிக அற்புதமான மற்றும் ஆழமான உணர்வுகளை கொண்ட கதை. தாய் பாசம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் மனித வாழ்க்கையில் மிகவும் முக்கியமான இன்னொரு உணர்வை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. கதையில் சஸ்பென்ஸ் அம்சங்களும் இருப்பதால், இதற்கு மேல் கதையைப் பற்றி தற்போது எதையும் பகிர முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
