சல்மான் கான் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான ‘சிக்கந்தர்’ திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து, சல்மான் கான் தற்போது ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய படத்திலும், நடிகை நயன்தாராவுடன் இணையும் மற்றொரு புதிய திரைப்படத்திலும் நடிக்க தயாராகி வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் சல்மான் கான் தனது திரைக்கதை தேர்வு குறித்து ஆச்சரியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: “என் வாழ்க்கையில் இதுவரை நான் ஒரு முழுமையான திரைக்கதையையும் முழுவதுமாக வாசித்ததில்லை. நான் பல கதைகள் மற்றும் திரைக்கதைகளை எழுதியிருக்கிறேன். ஆனால் முழு ஸ்கிரிப்ட்டை உட்கார்ந்து படிப்பது எனக்கு வழக்கமில்லை. ஒரு படத்தின் மையக்கரு என்ன, அதை எந்த விதத்தில் திரையில் கொண்டு வரப் போகிறார்கள், அதற்கு உள்ள கமர்ஷியல் மதிப்பு என்ன என்பதையே நான் அதிகமாக கவனிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு கதையை அதிகமாக அலசி ஆராய்வதைத் தவிர்க்கவே முழுமையான திரைக்கதை வாசிப்பில் இருந்து தன்னை விலக்கிக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில், தனது சொந்த யோசனைகள் மற்றும் கதைகளை எழுதுவதில் தனக்கு அதிக ஆர்வம் இருப்பதாகவும் சல்மான் கான் தெரிவித்துள்ளார். தற்போது அவரது இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
