தமிழில் ‘கொலை’, ‘சிங்கப்பூர் சலூன்’, ‘தி கோட்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை மீனாட்சி சவுத்ரி, தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்திற்கு பிறகு பான் இந்தியா நடிகையாக உயர்ந்துள்ளார். தற்போது அவர் நடிகர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ‘விருஷகர்மா’ திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதைத் தவிர இரண்டு புதிய இந்தி திரைப்படங்களிலும் அவர் பிஸியாக நடித்துக் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீனாட்சி சவுத்ரி பேசிய கருத்துகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அப்போது அவர் பேசுகையில், “எப்போதுமே உள்ளே ஒன்று வைத்து வெளியே வேறொன்றாக பேசும் பழக்கம் எனக்கு கிடையாது. நான் அப்படிப்பட்ட மனிதராக இருந்ததுமில்லை. எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் நேர்மையாக பேசவும் பழகவும் விரும்புகிறவள் நான். அதனால் பல விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், “ஆனால் என்னுடைய இந்த குணத்தை நான் ஒருபோதும் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. ஏனெனில், கேமரா முன்பு மட்டுமல்லாமல், கேமராவுக்கு பின்னாலும் போலியாக நடிக்கக் கூடாது என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
