நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் பிரபுதேவா மற்றும் நகைச்சுவை நடிகர் வடிவேலு மீண்டும் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். ‘முசாசி’ திரைப்படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இந்த புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏற்கனவே பல வெற்றி திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ள இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
பிரபுதேவா மற்றும் வடிவேலு கூட்டணி தமிழ் சினிமாவில் பல நினைவுகூரத்தக்க படங்களை வழங்கியுள்ளது. ‘காதலன்’, ‘எங்கள் அண்ணா’, ‘மனதை திருடிவிட்டாய்’, ‘மிஸ்டர் ரோமியோ’ போன்ற படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். மேலும், பிரபுதேவா இயக்கிய ‘போக்கிரி’ மற்றும் ‘வில்லு’ திரைப்படங்களிலும் வடிவேலு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இந்த கூட்டணியில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால், தற்போது உருவாகும் புதிய படத்திற்கும் ரசிகர்கள் அதிக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
பிரபுதேவா மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கும் இந்த புதிய திரைப்படத்திற்கு ‘பேங் பேங்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் டீசரை நடிகர் எஸ்.ஜே. சூர்யா கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது இந்த திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக ஒரு சிறப்பு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.
