‘டிக்டாக்’ போன்ற சமூக வலைதள செயலிகளில் வீடியோக்கள் வெளியிட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மிருணாளினி ரவி. எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் தனித்த முயற்சியின் மூலம் திரையுலகிற்கு வந்த அவர், பின்னர் ‘சாம்பியன்’, ‘எனிமி’, ‘எம்.ஜி.ஆர் மகன்’, ‘ஜாங்கோ’, ‘கோப்ரா’, ‘ரோமியோ’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் மிருணாளினி ரவி, தனது திரைப்பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், “விளையாட்டாக தொடங்கிய ‘டப்ஸ்மாஷ்’ வீடியோக்கள்தான் பின்னர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, சினிமாவில் எனக்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது. ஆனால் நான் ஒருபோதும் சினிமா வாய்ப்புகளுக்காக அந்த வீடியோக்களை செய்யவில்லை. அது இயல்பாக நடந்த ஒன்று. என் அதிர்ஷ்டம்தான் என்னை திரையுலகிற்கு கொண்டு வந்தது. ஆரம்பத்தில் என்னை சினிமாவிற்கு அனுப்ப பெற்றோர் தயங்கினார்கள். ஆனால் நான் எப்படியாவது நல்ல பெயர் வாங்குவேன் என்ற நம்பிக்கையில் என்னை அனுப்பி வைத்தார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலத்தில் பெரிய அளவிலான விமர்சனங்களை சந்திக்கவில்லை என்பது என் அதிர்ஷ்டம். சில சிறிய விமர்சனங்கள் வந்தபோதும் அவை என்னை சற்று யோசிக்க வைத்தன. ஆனால் அதிலிருந்து நான் என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். என்னைப் பற்றி யார் என்ன பேசினாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். அதையே நான் என்னுடைய பலமாக கருதுகிறேன்” என்றும் கூறினார்.
தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய அவர், “என் படிப்பு காலம் முழுவதும் படிப்பிலேயே சென்றுவிட்டது. சிறிய சிறிய காதல் முயற்சிகள் வந்திருக்கின்றன. ஆனால் எதுவும் என் மனதில் நிலைத்ததில்லை. தற்போது பெரிய அளவிலான வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், மனதிற்கு பிடித்த கதாபாத்திரங்களில் நடித்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். நெருக்கமான காட்சிகளில் நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் அந்த காட்சிகளில் உண்மையான காதல் உணர்வு இருக்க வேண்டும். பார்ப்பவர்களுக்கு சங்கடமாக இருக்கக்கூடாது. சவாலான கதாபாத்திரங்களில் தைரியமாக நடிக்கத் தயார். ஏனெனில் நான் எதற்கும் அதிகமாக கவலைப்பட மாட்டேன். எனக்கு மனதில் சரியாக தோன்றியதை செய்து விடுவேன். சினிமா இல்லையென்றால் எம்.எஸ் படித்து அமெரிக்காவில் செட்டிலாகி இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
