நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக மலையாள நடிகர்களின் பங்களிப்பு இந்த படத்தில் குறிப்பிடத்தக்க அளவில் இடம்பெற்றுள்ளது.
அந்த வகையில், நடிகர்கள் இந்திரன்ஸ், அஜு வர்க்கீஸ், உன்னி மாயா பிரசாத் மற்றும் ‘லப்பர் பந்து’ திரைப்படம் மூலம் கவனம் பெற்ற நடிகை சுவாசிகா உள்ளிட்ட நான்கு மலையாள நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இவர்களில் நடிகர் அஜு வர்க்கீஸ் மிகவும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், அவரது வருகை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜு வர்க்கீஸ் ஏற்கனவே தமிழில் ‘பறந்து போ’ திரைப்படத்திலும், விரைவில் வெளியாகவுள்ள ‘மூன் வாக்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடைபெற்ற ‘கருப்பு’ திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ஆர்ஜே பாலாஜி, நடிகர் அஜு வர்க்கீஸ் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில், “அஜு வர்க்கீஸ் எனது மிகவும் நெருங்கிய நண்பர். இந்தப் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்குமாறு நான் கேட்ட உடனே எந்த தயக்கமும் இல்லாமல் அவர் சம்மதித்தார். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக அவர் இதுவரை ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லை. நண்பனுக்காக ஒரு நாள் மட்டும் படப்பிடிப்பிற்கு வந்து நடித்துக் கொடுத்தார். அவரது அந்த நட்பு உணர்வும் ஆதரவும் எனக்கு மிகவும் முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார்.
