‘பசங்க’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாண்டிராஜ், தொடர்ந்து ‘வம்சம்’, ‘மெரினா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘தலைவன் தலைவி’ திரைப்படமும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், தற்போது அவர் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘பரிமளா & கோ’. இந்த திரைப்படத்தில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மிஷ்கின், சாண்டி, யோகி பாபு, சந்தோஷ் சோபன் மற்றும் அனந்திகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜியார்ஜி சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
‘பரிமளா & கோ’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர்கள் ஜெயராம், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் தங்களது டப்பிங் பணிகளை முடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அதற்கான வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், தற்போது சாண்டி மாஸ்டர் இடம்பெற்றுள்ள ‘வாச்சா உடாத’ வீடியோ பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
