உங்களுக்குத்தான் 50 ஆண்டுகள்….எனக்கு வருடங்கள் இல்லை… இசைஞானி இளையராஜா டாக் !

‘அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இளையராஜா. சிவகுமார், சுஜாதா உள்ளிட்டோர் நடித்த இந்த திரைப்படத்தை தேவராஜ் மோகன் இயக்கியிருந்தார். இசையமைப்பாளர் இளையராஜாவை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனரும் தயாரிப்பாளருமான பஞ்சு அருணாசலம் என்பது குறிப்பிடத்தக்கது. ‘அன்னக்கிளி’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இளையராஜாவின் இசைப் பயணமும் 50 ஆண்டுகளை கடந்துள்ளது.

இதனை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த இளையராஜா பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “உங்களுக்குத்தான் 50 ஆண்டுகள். எனக்கு வருடங்களே இல்லை. தற்போது பால்கியின் தமிழ் திரைப்படத்திற்கான இசைப்பணிகள் நடைபெற்று வருகிறது. வருடங்கள்தான் கடந்து செல்கின்றன. ஆனால் நான் எப்போதும் இருந்த அதே இடத்தில்தான் இருக்கிறேன். நான் எங்கிருந்து வந்தேனோ, இன்னும் அதே மனநிலையில்தான் இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

மேலும், மக்கள் என்னை இசைக் கடவுளாக பார்க்கிறார்கள். அவர்கள் அப்படியே பார்த்துவிட்டு போகட்டும். நான் இசையமைக்கும் போது எந்த நினைப்பும் இருக்காது. மன அமைதியை உருவாக்குவதே இசையின் முக்கிய நோக்கம். அதை நான் தொடர்ந்து செய்து வருகிறேன். அதனால்தான் மக்கள் என்னை கொண்டாடுகிறார்கள். நான் இல்லாவிட்டாலும் என்னுடைய இசை மூலம் அந்த கொண்டாட்டம் என்றென்றும் தொடரும்” என்றும் அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, “ஜி.கே. வெங்கடேஷ், எம்.எஸ். விஸ்வநாதன், சலீல் சவுத்ரி உள்ளிட்ட பல இசை மேதைகளிடம் நான் இசைக்கருவிகள் வாசித்திருக்கிறேன். 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் உதவி இசையமைப்பாளராக பணியாற்றியிருந்தாலும், தனியாக இசையமைக்க தொடங்கியபோது எனக்குள் பல கேள்விகள் இருந்தன. தனியாக காட்டில் விடப்பட்டதுபோல உணர்ந்தேன். நீண்ட நாள் பயிற்சிக்கு பிறகுதான் ‘அன்னக்கிளி’ பாடல்கள் உருவானது. யாரிடமும் எதையும் கேட்காமல், ஒவ்வொரு சூழ்நிலையையும் புரிந்துகொண்டு ஆத்மார்த்தமாக இசையை கொடுத்தேன். அதனால்தான் அந்த இசை இன்றும் உயிருடன் வாழ்கிறது. அது மக்களின் ஆத்மாவோடு கலந்துவிட்டது” என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading