‘அவள் பெயர் தமிழரசி’ மற்றும் ‘விழித்திரு’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் மீரா கதிரவன். தற்போது அவர் புதுமுக நடிகர்கள் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். இஸ்லாமிய குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் இயக்குனர் கஸ்தூரி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேசம் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ‘ஹபீபி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்திற்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். மேலும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வழங்கும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 2024ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ‘ஹபீபி’ என்ற சொல்லுக்கு அரபி மொழியில் அன்பு மற்றும் காதல் என்று அர்த்தம். அதேபோல், “அன்பின் வழியது உயிர்நிலை” என்ற திருக்குறள் வாசகமும் போஸ்டரில் இடம்பெற்றிருந்தது. இதனால் மனிதர்களுக்கிடையேயான அன்பு, பாசம் மற்றும் காதலை இஸ்லாமிய பின்னணியில் பேசும் திரைப்படமாக இது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த திரைப்படம் குறித்து இயக்குனர் மீரா கதிரவன் பேசியபோது, “இது என்னுடைய கனவு திரைப்படம். இப்படிப்பட்ட ஒரு படத்துடன் தான் நான் இயக்குனராக அறிமுகமாக வேண்டும் என்ற எண்ணத்துடன் திரைத்துறைக்கு வந்தேன். அந்த கனவை நனவாக்குவதற்கு 20 ஆண்டுகள் ஆகியிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தற்போது ‘ஹபீபி’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
