கேரளாவில் தற்போது அகில கேரள வானொலி நாடகத் திருவிழா நடைபெற்று வருகிறது. மே 10ஆம் தேதி தொடங்கிய இந்த விழா, மே 18ஆம் தேதி வரை மொத்தம் ஒன்பது நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக தினமும் இரவு 9.30 மணிக்கு வானொலி நாடகங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அதில் ‘தெய்வத்தின் மனமாற்றம் கண்டு’ என்ற தலைப்பிலான நாடகமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நாடகத்தில் அசோகன் என்ற முக்கிய கதாபாத்திரத்திற்கு நடிகர் மோகன்லால் குரல் கொடுத்துள்ளார்.
நிலச்சரிவு மற்றும் இயற்கை வளங்களின் சுரண்டல் போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை பின்னணியாகக் கொண்டு இந்த நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்யும் எண்ணத்துடன் ஒரு இடத்திற்கு வரும் அசோகன் என்ற மனிதரும், அங்கு இருக்கும் ஒரு மரமும் இடையே நடைபெறும் உரையாடல்தான் இந்த நாடகத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது.
திரையுலகில் மிகச்சிறந்த நடிகராக விளங்கும் மோகன்லால், வானொலி நாடகத்தில் குரல் கொடுப்பதற்காக ஒவ்வொரு வசனத்தையும் மிகத் துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தியதாக கூறப்படுகிறது. அதனால் பல வசனங்களுக்கு பலமுறை டேக் எடுத்து பேசியிருக்கிறார். உடல்நலம் சரியில்லாத நிலையிலும், இந்த வானொலி நாடகத்தின் மீது கொண்டிருந்த ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக மோகன்லால் தனது பங்களிப்பை முழுமையாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
