ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘கருப்பு’. இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். நீதிமன்ற வழக்கை மையமாகக் கொண்டு, அதனுடன் கடவுள் நம்பிக்கையையும் இணைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
‘கருப்பு’ திரைப்படம் மே 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘கருப்பு’ திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலும் பிரம்மாண்டமான விழா நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, “கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் நடித்த படங்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட ஒரு திரைப்படம். இந்த படத்தின் முதல் பாதி உணர்ச்சிப்பூர்வமான பயணமாக இருக்கும். இரண்டாம் பாதி முழுவதும் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடும் தருணங்களால் நிரம்பியிருக்கும். மே 14ஆம் தேதி மீண்டும் உங்கள் அன்பை பெறுவோம் என்று நம்புகிறேன். நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அதுபோல நானும் நீங்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு அண்ணனாக சொல்கிறேன், இந்த வயதை வீணாக்காதீர்கள். பெரிய கனவுகளை காணுங்கள். நீங்கள் நினைப்பதெல்லாம் ஒருநாள் நிச்சயம் நனவாகும்” என்று உருக்கமாக பேசினார்.
