விஜய் நடிப்பில் பேரரசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சிவகாசி’. இந்த திரைப்படத்தில் அசின், பிரகாஷ் ராஜ், எம்.எஸ். பாஸ்கர், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதில் விஜய்யின் தங்கையாக ‘வைரம்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் கிருஷ்ணா சஜித். சமீபத்தில் ஒரு யூடியூப் சேனல் வழங்கிய பேட்டியில், விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கிருஷ்ணா சஜித், “விஜய் சார் மிகவும் கடினமாக உழைக்கும் நபர். அதே சமயம் மிகவும் பணிவான குணம் கொண்டவர். அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் தெரியும், அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய உயரத்தை அடைவார் என்று. யாராவது உதவி கேட்டால் உடனே செய்து தருவார். உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்வார். அவரிடம் நிறைய நல்ல குணங்கள் இருக்கின்றன. அதனால்தான் இன்று அவருக்கு இப்படிப்பட்ட உயர்ந்த இடம் கிடைத்துள்ளது. அதைப் பார்க்கும் போது எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி.
நானும் அவருடன் நடித்திருக்கிறேன். இன்று அவர் ஒரு முதலமைச்சர் என்று சொல்லிக்கொள்ளும் வாய்ப்பு எனக்கும் கிடைத்துள்ளது. அது எனக்கு பெருமையாக இருக்கிறது. அவரை தொடர்பு கொண்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. ‘சிவகாசி’ படம் முடிந்த சமயத்தில் பேசினோம். அதன் பிறகு சமீபத்தில் அவரது குழுவினரை தொடர்பு கொண்டு நம்பர் வாங்கினேன். தேர்தல் முடிவுகள் வந்த பிறகு அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பினேன். அதற்கு அவர் பதிலும் அனுப்பினார். அவர் அதிகமாக பேசாத குணம் கொண்டவர் என்பது அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் தெரியும். ஆனால், உடன் நடிக்கும் அனைவரையும் மிகவும் சௌகரியமாக உணரச் செய்வார்” என்று தெரிவித்துள்ளார்.
