சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘சிஸ்டம்’. இந்த திரைப்படத்தை இயக்குநர் அஸ்வினி திவாரி இயக்கியுள்ளார். மேலும், ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமூக மற்றும் நீதித்துறை பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களிடையே தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த திரைப்படம் வரும் மே 22ஆம் தேதி ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லர் வெளியானதையடுத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் குறித்து அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக நீதிமன்றம், சமூக அமைப்பு மற்றும் அதிகார மையங்களை மையமாக கொண்டு கதை நகர்வது டிரெய்லரில் வெளிப்படையாக காட்டப்பட்டுள்ளது.
இந்த படம் குறித்து நடிகை ஜோதிகா பேசுகையில், “பல அடுக்குகள் கொண்ட இந்த கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்வது எனக்கு சவாலான அனுபவமாக இருந்தது. அதே நேரத்தில் அது மிகுந்த உற்சாகத்தையும் அளித்தது. சமத்துவமின்மை மற்றும் அதிகாரம் ஒன்றாக வாழும் நவீன இந்தியாவின் நிலையை இந்த திரைப்படம் பேசுகிறது. இயக்குநர் அஸ்வினி மிகவும் தெளிவான மற்றும் உண்மைத்தன்மை கொண்ட பார்வையுடன் இந்த கதையை உருவாக்கியுள்ளார். ப்ரைம் ஒரிஜினல் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் இந்த படம் வரும் மே 22ஆம் தேதி மக்களை சென்றடையும் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ‘நேகா’ என்ற அரசு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சோனாக்ஷி சின்ஹா பேசுகையில், “இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. ஒரு நடிகையாக என்னை சவாலுக்கு உட்படுத்தும் கதைகளை நான் எப்போதும் விரும்புவேன். ‘Dahaad’ தொடருக்குப் பிறகு, ‘சிஸ்டம்’ போன்ற வித்தியாசமான கதையில் நடிக்கும் வாய்ப்பை ப்ரைம் வீடியோ எனக்கு வழங்கியுள்ளது. இது சாதாரண நீதிமன்ற நாடக திரைப்படம் மட்டுமல்ல; சமூகத்தில் நீதியும் சமூக அமைப்புகளும் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளன என்பதை பிரதிபலிக்கும் ஒரு முக்கியமான படம்” என்று தெரிவித்துள்ளார்.
