தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு வருபவர் நடிகர் சந்தானம். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர், தொடர்ந்து ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘இங்க என்ன சொல்லுது’, ‘இனிமே இப்படித்தான்’, ‘சக்கப்போடு போடு ராஜா’, ‘தில்லுக்கு துட்டு’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை மற்றும் குடும்ப பொழுதுபோக்கு கலந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் சந்தானத்திற்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்த நிலையில், தற்போது சந்தானம் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநரான செல்வின் ராஜ் சேவியர் எழுதி இயக்கும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகை அபர்ணா தாஸ், நடிகர் விடிவி கணேஷ், ஆனந்த்ராஜ் மற்றும் கல்கி ராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜாம்பி கதையை மையமாக கொண்டு, திரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்த பாணியில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.
சமீபத்தில் இந்த திரைப்படத்தின் தலைப்பு வெளியிடப்பட்ட நிலையில், அதற்கு ‘லவ் பைட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இந்த திரைப்படத்திற்கான பூஜை கடந்த மே 8ஆம் தேதி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோவை படக்குழு சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது ‘லவ் பைட்’ திரைப்படத்தின் புரோமோ வீடியோவை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
