‘மாநகரம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் லோகேஷ் கனகராஜ். அதனைத் தொடர்ந்து ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். குறிப்பாக, ‘லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்’ என்ற புதிய கான்செப்ட்டை அறிமுகப்படுத்தி அதன் கீழ் பல திரைப்படங்களை உருவாக்கி வருவதால், அவர் இயக்கும் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை வைத்து ‘கூலி’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிசி’ திரைப்படத்திலும் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் ‘தேவதாஸ்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன், நடிகை வாமிகா கபி ‘சந்திரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான கிளிம்ஸ் வீடியோவில், வாமிகா கபி மற்றும் சஞ்சனா ஆகியோர் பாலியல் தொழிலாளிகளாக நடித்திருப்பது போலவும், லோகேஷ் கனகராஜ் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும், இந்த திரைப்படமும் பழிவாங்கலை மையமாக கொண்ட கதையாக உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கிய ‘ராக்கி’, ‘சாணிக்காயிதம்’, ‘கேப்டன் மில்லர்’ உள்ளிட்ட திரைப்படங்களும் பழிவாங்கும் கதைக்களத்தை மையமாக கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ‘டிசி’ திரைப்படத்தின் டிரெய்லர் வருகிற மே 15ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
