தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூர்யா. தற்போது அவர், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக நடிகை திரிஷா நடித்துள்ள இந்த படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீதிமன்ற வழக்கை மையமாக கொண்டு, அதனுடன் கடவுள் நம்பிக்கைகளையும் இணைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படக்குழு தற்போது புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் சூர்யா மற்றும் திரிஷா இடம்பெற்ற ‘கருப்பு’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து, திரைப்படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், ‘கருப்பு’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘வெரப்பா’ பாடல் இன்று வெளியாகும் என்று இசையமைப்பாளர் சாய் அபயங்கர் அறிவித்திருந்தார். இதனுடன், இந்த திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வீரபத்ருடு’ படத்தின் டிரெய்லரும் நேற்று வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்ற ‘வீரபத்ருடு’ திரைப்பட விழாவில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து பேசியது தற்போது கவனம் பெற்றுள்ளது. அப்போது அவர் பேசுகையில், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை பலர் நம்பவில்லை. அவரை பற்றி எதிர்மறையான கருத்துக்களும் பரவின. ஆனால் அந்த மனிதர் தன்னம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. தனது சிந்தனைகள், கனவுகள் மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் தொடர்ந்து பயணித்தார். இன்று அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக உயர்ந்துள்ளார். மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்தபோது பலரும் சந்தேகத்துடன் பார்த்தனர். ஆனால், தன்னால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. அந்த நம்பிக்கையே இன்று கோடிக்கணக்கான மக்களின் ஆதரவாக மாறியுள்ளது. மக்கள் ஒருவரை உண்மையாக நம்பும்போது, அது மிகப்பெரிய சக்தியாக மாறும்” என்று தெரிவித்துள்ளார்.
