பிரபல சின்னத்திரை நடிகையான திவ்யங்கா திரிபாதி, தனது திரைப்பயணத்தின் ஆரம்பகாலத்தில் சந்தித்த கடுமையான போராட்டங்கள் மற்றும் பணிச்சுமைகள் குறித்து சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார். குறிப்பாக ‘பானு மேன் தெரி துல்ஹன்’ தொடரில் நடித்த காலத்தில் எதிர்கொண்ட அனுபவங்களை அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், “என்னுடைய ஆரம்ப காலங்களில் நான் படப்பிடிப்பு தளத்திலேயே வாழ்ந்தது போல இருந்தது. ஓய்வெடுக்க கூட சரியான நேரம் கிடைக்காது. பல மணி நேரங்கள் தொடர்ந்து இடைவிடாமல் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டிய சூழல் இருந்தது. சில நேரங்களில் கொஞ்சம் இடம் கிடைத்தாலே அங்கேயே தரையில் படுத்து தூங்கிவிடுவேன், தயங்கமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “சில சமயங்களில் படுத்து ஓய்வெடுக்க கூட இடமிருக்காது. அப்போது ஒரு தூணில் சாய்ந்து நின்றபடியே சில நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் வேலைக்குத் திரும்புவேன். அந்த காலங்கள் மிகவும் கடினமானவை,” என்று நினைவுகூர்ந்துள்ளார். சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரை மற்றும் பொழுதுபோக்கு துறையில் பயணித்து வரும் திவ்யங்கா திரிபாதி, இன்று இந்திய தொலைக்காட்சி உலகின் மிகவும் நேசிக்கப்படும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தனது உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் மூலமே இந்த உயரத்தை அடைந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
