என் மகன் வேதாந்தை சிறிய வயதிலிருந்தே ஒரு முதிர்ச்சியான நபரைப் போல மதித்து வளர்த்தேன் – நடிகர் மாதவன்!

திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கும் நடிகர்களில் ஒருவர் மாதவன். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தனது இயல்பான நடிப்பு மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களால் தொடர்ந்து பாராட்டுகளை பெற்று வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான “துரந்தர் 2” திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது மகன் வேதாந்த் மாதவனை எப்படி வளர்த்தார் என்பது குறித்து மாதவன் மிகவும் வெளிப்படையாக பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், “குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பது என்றால், அவர்களிடம் உண்மைகளை மறைத்து வளர்ப்பது அல்ல. மாறாக உலகின் எதார்த்தங்களை சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு புரியவைத்து வளர்ப்பதுதான் சரியான அணுகுமுறை என்று நான் நம்புகிறேன்.

என் மகன் வேதாந்தை மிகவும் சிறிய வயதிலிருந்தே ஒரு முதிர்ச்சியான நபரைப் போல மதித்து வளர்த்தேன். குறிப்பாக, பெரும்பாலான பெற்றோர்கள் பேச தயங்கும் விஷயங்களான பாலியல் பாதுகாப்பு, தவறான தொடுதல் மற்றும் கருத்தடை போன்ற விஷயங்களை அவர் டீன்-ஏஜ் பருவத்தை அடையும் முன்பே, அதாவது நான்கு வயதிலிருந்தே மிகவும் வெளிப்படையாக பேசிவந்தேன். இதனால் எங்களுக்குள் நம்பிக்கை அதிகரித்தது. அந்த வெளிப்படையான உரையாடல்கள், வேதாந்திற்கு என்னைப் பற்றிய மரியாதையையும் அதிகரித்தன.

சினிமா நட்சத்திரத்தின் மகனாக இருப்பதால் வரும் தேவையற்ற செல்வாக்குகள், புகழின் இருண்ட பக்கங்கள் மற்றும் பெண்களை எவ்வாறு மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதுபோன்ற வாழ்க்கை பாடங்களையும் முன்கூட்டியே கற்றுக்கொடுத்தேன். வெளி உலகத்தில் ஏற்படும் அழுத்தங்களை அவன் எளிதாக சமாளிக்க வேண்டும் என்பதற்காகவே இவற்றை சொல்லிக்கொடுத்தேன். ஒரு தேசிய விருது பெற்ற நடிகரின் மகன் என்ற அடையாளம் வேதாந்தை ஒருபோதும் பாதிக்கவில்லை. நான் பல ஆண்டுகள் உழைத்து இயக்கி நடித்த ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ திரைப்படத்தை பார்த்த பிறகு கூட, ‘Not bad dad’ என்று மட்டுமே கூறினார். என் மகனை அவ்வளவு எளிதில் ஈர்க்க முடியாது. நான் நடித்த திரைப்படங்களில் அவருக்கு மிகவும் பிடித்தது 2009ஆம் ஆண்டு வெளியான ‘யாவரும் நலம்’ திரைப்படம்தான்.

திரையுலகில் இருக்கும் பல தந்தைகள் தங்கள் பிள்ளைகளும் சினிமாவில் வர வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் நான் அதற்கு முற்றிலும் மாறுபட்டவன். என் மகன் என் நிழலில் வளராமல், தனக்கென தனி அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அதனால்தான் தற்போது சர்வதேச நீச்சல் போட்டிகளில் பதக்கங்கள் வென்று வரும் வேதாந்த், நான் கொடுத்த சுதந்திரத்தையும் நம்பிக்கையையும் சரியாக பயன்படுத்தி வருகிறார்,” என்று மாதவன் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading