தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் குறிப்பிடத்தக்கவராக திகழ்பவர் ராஜீவ் மேனன். ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் பல சிறந்த படைப்புகளை வழங்கியுள்ளார். சமீப காலமாக நடிகராகவும் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறார். குறிப்பாக ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் நடிகராக புதிய அடையாளம் பெற்ற அவர், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘பேட்ரியாட்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்த திரைப்படம் தொடர்பாக அளித்த பேட்டியில், நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்த ஒரு பிரமாண்ட புரோமோ ஷூட்டை படமாக்கிய அனுபவத்தை ராஜீவ் மேனன் பகிர்ந்துகொண்டார். அவர் பேசுகையில், “நெல்சன் இயக்கிய ‘டாக்டர்’, ‘ஜெயிலர்’ போன்ற திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பொதுவாகவே எனக்கு நகைச்சுவை சார்ந்த படங்கள் பிடிக்கும். நெல்சனின் படங்களில் ஒரு தனித்துவமான பிளாக் ஹியூமர் இருக்கும். ஒரு நாள் நெல்சன், மணிரத்னத்தை சந்தித்தபோது, அடுத்த படத்திற்கு புதிதான ஒரு லுக் வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு மணிரத்னம், ‘ராஜீவிடம் கேளுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால், ‘அவர் சம்மதிப்பாரா?’ என்று நெல்சன் தயங்கியபோது, ‘கேட்டால்தான் தெரியும்’ என்று மணிரத்னம் அவரை அனுப்பியிருக்கிறார். அதன் பிறகு நெல்சன் என்னை சந்தித்து கதையை சொன்னார். முதலில் அவர் என்னிடம் டிஜிபி அல்லது கமிஷனர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க அழைக்க வந்திருக்கிறார் என்று நினைத்தேன். ஆனால் அவர் சொன்ன கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. கதை முடிந்தவுடன், ‘இந்த புரோமோவுக்கு நீங்கள் ஒளிப்பதிவு செய்ய முடியுமா?’ என்று கேட்டார். உடனே சம்மதித்தேன்.
ஆனால், ஒரே வாரத்தில் புரோமோ ஷூட்டை நடத்த வேண்டும் என்றார். அடுத்த சில நாட்களிலேயே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. கமல்ஹாசனுடன் நான் ஏற்கனவே சில விளம்பரங்களில் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் ரஜினிகாந்துடன் இது தான் முதல் முறை. இருவரும் இணைந்து நடந்து வரும் ஒரு காட்சியை எடுக்க முயன்றோம். ஆனால் அந்த காட்சி சரியாக வர சுமார் 20 டேக்குகள் எடுத்தோம். அவர்கள் இருவரும் நடந்து வரும் விதமே மிகவும் ஸ்டைலாக இருந்தது. அவர்களுக்கே உரிய ஒரு வசீகரம் அந்த காட்சியில் இருந்தது.
பின்னர் மற்ற காட்சிகளையும் எடுத்தோம். அப்போது தான் புரிந்தது, நெல்சன் ஒவ்வொரு காட்சிக்கும் 20 டேக்குகள் எடுப்பார் என்று. அவர் நடிக்கும் காட்சியாக இருந்தாலும் கூட அதே அளவு கவனம் செலுத்துவார். அதன் பிறகு இருவருக்குமான Faceoff காட்சியை எடுத்தோம். அப்போது ரஜினி சார் மற்றும் கமல் சார் இருவரின் உயரம் சமமாக இல்லாததால், ஒரு கட்டை வைத்து உயரத்தை சரிசெய்ய முயன்றோம். அதை பார்த்த ரஜினி சார், ‘என்ன… இருங்க’ என்று சொல்லி தனது ஷூவை கழற்றி வைத்தார். உடனே இருவரின் உயரமும் சரியாகிவிட்டது. அதுதான் சினிமா மீது அவருக்கு இருக்கும் காதல். இந்த வயதிலும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவராலும் ஜென்-ஸி தலைமுறையினரிடமும் எளிதாக சென்றடைய முடிகிறது. நான் பல பெரிய திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் அந்த ஒரு புரோமோவிற்காக கிடைத்த பாராட்டுகளும், போன் கால் வரவேற்புகளும் மிகவும் அதிகமாக இருந்தது,” என்று ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார்.
