நடிகர் ராம்சரண் நடிப்பில், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பெத்தி’. இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், சிவராஜ்குமார், ஜெகபதி பாபு மற்றும் பொம்மன் இராணி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் வருகிற ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ளது.
இத்திரைப்படம் குறித்து அதன் தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா சமீபத்தில் பகிர்ந்த தகவல்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அவர் கூறுகையில், “இந்த திரைப்படத்தின் கதையை முதன்முதலாக கேட்ட தருணமே என்னை மிகவும் பாதித்தது. கடந்த பத்து ஆண்டுகளாக நான் சினிமாவில் பணியாற்றி வருகிறேன். ஆனால் இதுபோன்ற உற்சாகத்தை எந்த கதையும் எனக்கு கொடுத்ததில்லை. கதை கேட்ட பிறகு சுமார் இருபது நிமிடங்கள் அந்த உணர்விலிருந்து வெளிவர முடியாமல் இருந்தேன்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “இந்த படத்திற்காக ஒரு வருடத்திற்கு மேலாக முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்றன. ஒவ்வொரு செட்டையும் அமைப்பதற்கு முன்பாக சிறிய மாதிரிகள் உருவாக்கப்பட்டு, அதன் பிறகே பெரிய அளவில் கட்டப்பட்டது. மொத்தமாக 24 பிரம்மாண்டமான செட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதோடு 60க்கும் மேற்பட்ட கூடுதல் அமைப்புகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.
பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்துவது சிரமமாக இருந்ததால், கதைக்கு தேவையான இடங்களை அனைத்தையும் தனியாக உருவாக்கி அதற்குள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. 70 மற்றும் 80களின் பின்னணியில் படம் அமைந்துள்ளதால், விஜயநகரம் பகுதியை முழுமையாக மறுவடிவமைத்து அந்த காலகட்டத்தின் தெருக்கள், கடிகார கோபுரங்கள் மற்றும் சுற்றுப்புறங்களை மீண்டும் உருவாக்கினோம். எந்த செட்டும் செட் போல தெரியக்கூடாது என்பதற்காக மிகவும் இயல்பாக வேலை செய்யப்பட்டிருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “படத்தில் இடம்பெறும் மல்யுத்த காட்சிகளுக்காக இதுவரை யாரும் பார்க்காத வகையில் அரங்க அமைப்பு உருவாக்கப்பட்டது. குறிப்பாக தரைக்கடியில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான செட்டில் ராம்சரண் ‘பெத்தி’ கதாபாத்திரத்தில் தோன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் காட்சிகளும் கிராமத்து உணர்வை தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ‘லகான்’ திரைப்படத்தைப் போல இல்லாமல், வயல்வெளி மேடுகளில் அமர்ந்து கிரிக்கெட் பார்க்கும் மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக அந்த காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சர்க்கரை ஆலை, ரயில் அமைப்பு, மலையடிவார நகரம் போன்ற பல அமைப்புகள் அனைத்தும் செட்களாக உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை உண்மையான இடங்களைப் போல தோன்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஹைதராபாத்தில் உள்ள பழைய பங்களாவுக்குள் முழுமையான மலையடிவார நகரத்தை உருவாக்கியது மிகவும் சவாலான பணியாக இருந்தது. இது முற்றிலும் வித்தியாசமான திரைப்படமாக இருக்கும். படம் முடிந்து ரசிகர்கள் திரையரங்கிலிருந்து வெளியே வரும் போது அவர்களின் கண்களில் கண்டிப்பாக கண்ணீர் இருக்கும். அந்த அளவுக்கு ‘பெத்தி’ கதாபாத்திரத்தின் வாழ்க்கைப் பயணம் மனதை தொடும்,” என்று தெரிவித்துள்ளார்.
