இந்தி திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் ஷாருக்கான், தற்போது ‘கிங்’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘வார்’, ‘பதான்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இந்த படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானா கானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அனில் கபூர், ராணி முகர்ஜி, தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் இணையும் ஆறாவது திரைப்படம் இதுவாக இருப்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சமீபத்தில் ‘கிங்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. அப்போது ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் இடையேயான காதல் மற்றும் நடனக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் அந்த காட்சிகள் 52 வினாடிகள் கொண்ட வீடியோவாக இணையத்தில் கசிந்தது. இது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அந்த வீடியோ உடனடியாக நீக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
