நடிகரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளருமான நடிகர் சத்யராஜ், சமீபத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், “விஜய் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் ஆகியோரை தங்களது கொள்கை வழிகாட்டிகளாகக் கூறியுள்ள விஜய், அவர்களின் பாதையில் சென்று சமூக நீதி நிறைந்த ஆட்சியை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “எனது அன்புச் சகோதரர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தோல்வி எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆனால் அவர் தோல்வியால் தளர்ந்து விடுபவர் அல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி, டெல்லிக்கு அஞ்சாத நிலைப்பாட்டுடன் பல வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை கொண்டு வந்து தமிழ்நாட்டை முன்னேற்றமான மாநிலமாக மாற்றியுள்ளது. அதற்காக நான் அவருக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன்” என கூறியுள்ளார்.
மேலும், “இந்த திராவிட ஆட்சியின் காரணமாக நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்டாலின் மற்றும் அவரது கட்சிக்கு ஆதரவாளனாக இருந்து வந்தேன். இனி வரும் காலங்களிலும் அதேபோல என் ஆதரவு இன்னும் வலுவாக இருக்கும் என்பதை பெருமையுடனும் உறுதியுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று சத்யராஜ் குறிப்பிட்டுள்ளார்.
