நான் படங்கள் தயாரிக்க கமல்ஹாசன் சார் தான் காரணம்… இயக்குனர் லோகேஷ் கனகராஜ் OPEN TALK!

‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் அறியப்பட்ட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் விது, ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ள ‘29’ திரைப்படம் மே 8ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்களான கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக ஆர்‌.ஜே.பாலாஜி பங்கேற்றார்.

இந்நிகழ்வில் பேசிய கார்த்திக் சுப்புராஜ், “இயக்குநர் ரத்னகுமாரை ஆரம்ப காலத்திலிருந்தே எனக்கு தெரியும். நாங்கள் பல விஷயங்கள் குறித்து விவாதித்திருக்கிறோம். அப்போது ரத்னகுமார், லோகேஷ் கனகராஜ் மற்றும் நான் என அனைவரும் எங்கள் குறும்படங்கள் மற்றும் எதிர்கால கனவுகள் குறித்து பேசிக்கொண்டிருந்தோம். இந்தப் படத்தை லோகேஷ் உடன் இணைந்து தயாரிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் கிரியேட்டிவ் பணிகளை நான் கவனித்துள்ளேன். மற்ற பொறுப்புகளை என் உறவினர் கார்த்திகேயன் சிறப்பாக மேற்கொண்டார்,” என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய லோகேஷ் கனகராஜ், “நேற்று நான் அழைத்தபோது உடனே இந்த நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் நன்றி. இது என் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம். இதற்கு முன்பு ‘பைட் கிளப்’, ‘மைக்கல்’ போன்ற படங்களை நண்பர்களுக்காக வெளியிட்டுள்ளேன். இந்த படம் உருவாக முக்கிய காரணம் ரத்னகுமார். அவர் என் எழுத்தாளர், என் நண்பர், என் போட்டியாளர். நாங்கள் ஆரம்ப காலங்களில் தெரு தெருவாகச் சுற்றி வாய்ப்புகளை தேடியவர்கள். அப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பிட்சா ’ படம் வெற்றி பெற்றது. அந்த வெற்றி எங்களைப் போன்ற பலருக்கு நம்பிக்கை அளித்தது. ரத்னகுமாரின் ‘மது’ மற்றும் என் ‘அவியல்’ குறும்படங்களும் அதே நிறுவனத்தில் வெளியானது. இப்போது நண்பர்களாக இணைந்து பணியாற்றுவது பெருமையாக உள்ளது.

நாம் வளரும்போது நம்முடன் இருந்தவர்களையும் முன்னேற்ற வேண்டும் என்பதே என் எண்ணம். இதற்கு உத்வேகம் கமல்ஹாசன் தான். சினிமாவில் சம்பாதிப்பதை மீண்டும் சினிமாவிலேயே முதலீடு செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தவர் அவர். இந்தப் படம் மட்டுமல்ல, என் நிறுவனத்தில் மேலும் பல படங்கள் உருவாக உள்ளன. புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். இந்தப் படத்திற்கும் ஆதரவு தர வேண்டும். நான் இந்தக் கதையை கேட்காமல் ரத்னகுமாரை முழுமையாக நம்பியுள்ளேன். ரசிகர்களின் விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். படம் நன்றாக இருந்தால் மற்றவர்களையும் பார்க்க சொல்லுங்கள்,” என்று தெரிவித்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading