இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் உதவி இயக்குநராக பணியாற்றிய பிரவீன் எஸ்.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சத்யவான் சாவித்ரி’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெண்மையை மையமாகக் கொண்ட இந்த திரைப்படத்தில் மிஷ்கின், பால சரவணன், சாருகேஷ், ஷில்பா மஞ்சுநாத், மாலா பார்வதி, தீபா, ஆர். சுந்தர்ராஜன் மற்றும் ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை வெடிக்காரன்பட்டி சக்திவேல், உமேஷ் குமார் பன்சால் மற்றும் வைஷ்ணவி விவேக் சந்தர் இணைந்து தயாரிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள நிலையில், அருள் வின்செண்ட் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
இத்திரைப்படத்தின் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படம் குறித்து இயக்குநர் பிரவீன் எஸ்.விஜய் கூறுகையில், இது ஒரு கோர்ட்டு ரூம் டிராமா மற்றும் த்ரில்லர் கலந்த கதை என தெரிவித்துள்ளார். குடும்பப் பெண்ணாகவும், அதே சமயம் சாதிக்க விரும்பும் வழக்கறிஞராகவும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். எதிர்பாராத சூழ்நிலையால் அவர் ஒரு முக்கிய வழக்கை மேற்கொள்ள வேண்டிய நிலை உருவாகிறது. அந்த வழக்கை நடத்துவதில் அவருக்கு உள்ளார்ந்த உணர்ச்சி வேதனைகளும் தடையாக இருக்கும் நிலையில், அவரது சீனியர் வழக்கறிஞர் தவறான தரப்புக்கு ஆதரவாக வாதாடுகிறார்.
அந்த உண்மையை அவருக்கே உணர்த்த முயற்சிக்கும் போது, அந்த சீனியரின் உண்மையான முகம் வெளிப்படுகிறது. அந்த வழக்கு கீர்த்தியின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைகிறது. அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதே இந்தப் படத்தின் மையக்கரு ஆகும். கோர்ட்டில் கீர்த்தி சுரேஷ் மற்றும் சீனியர் வழக்கறிஞராக நடித்துள்ள மிஷ்கின் இடையிலான வாதப்பிரதிவாதங்கள் உணர்ச்சி மற்றும் நிஜத்தன்மை கலந்த காட்சிகளாக இருக்கும் என்றும், அவையே படத்தின் முக்கிய சிறப்பாக இருக்கும் என்றும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
