இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மம்முட்டி, சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமா வாழ்க்கையின் தனித்துவம் குறித்து திறந்த மனதுடன் கருத்துகளை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “சினிமா என்பது ஒரே மாதிரியாக தொடர்ந்து செய்யக்கூடிய வேலை அல்ல. ஒவ்வொரு நாளும் புதிய மனிதர்கள், புதிய இடங்கள் மற்றும் புதிய சூழ்நிலைகளோடு நாம் இயங்க வேண்டியிருக்கும். இன்று இணைந்து பணிபுரியும் குழு, நாளை முற்றிலும் மாறிவிடும். குடும்பத்தினர், நண்பர்கள் என அனைத்தும் மாற்றமடைந்து கொண்டே இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு திரைப்படத்தில் குறைந்தது இரண்டு மாதங்கள் வேறு குழுவுடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருப்பதாகவும், அது முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கை அனுபவமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். “ஒவ்வொரு நாளும் புதிதாகத் தொடங்கும் ஒரு பயணம் போலவே இருக்கும். புதிய விஷயங்களைச் செய்ய வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும்,” என்று அவர் கூறினார்.
அதே கதாபாத்திரத்தில் நடித்தாலும் தினந்தோறும் நடிப்பில் மாறுபாடு இருக்கும் என்றும் அவர் விளக்கினார். “நேற்று நான் நடித்த விதமும், இன்று நான் நடிக்கும் விதமும் ஒரே மாதிரி இருக்காது. ஒரே கதை, ஒரே நடிகர்கள் இருந்தாலும், அந்த நாளின் மனநிலை மற்றும் சூழ்நிலை மாற்றம் காரணமாக நடிப்பிலும் மாற்றம் ஏற்படும்,” என்று தெரிவித்தார். சினிமா துறை சவால்களையும் புதுமையையும் தொடர்ந்து அளிக்கும் தன்மை கொண்டதனால் தான் நீண்ட காலமாக அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன் என்றும் மம்முட்டி கூறியுள்ளார்.
