வினோத் சூர்யவன்ஷி, பஞ்சாயத் என்ற வெப் தொடரின் மூலம் பரவலாக அறியப்பட்டவர். அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியான இந்த தொடரின் மூலம் பெரும் கவனம் பெற்ற அவர், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது நிஜ வாழ்க்கையில் இன்னும் நீடித்து வரும் சாதியப் பாகுபாடுகள் மற்றும் தீண்டாமை குறித்து மிகுந்த வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது, “ஒரு நடிகராக நான் பொதுமக்களிடம் அங்கீகாரம் பெற்றிருந்தாலும், என் சொந்த ஊரில் இன்னும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கோயிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இன்றும் நாங்கள் கோயில்களின் வெளியே நின்று கொண்டே கடவுளை வழிபட வேண்டிய நிலை தொடர்கிறது. உள்ளே செல்லும் உரிமை எங்களுக்கு மறுக்கப்படுவது மிகுந்த மன வேதனையை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கோயில்கள் மட்டுமல்லாமல் அன்றாட வாழ்க்கையிலும் இத்தகைய பாகுபாடுகள் தொடர்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். “சலூன் கடைகளிலும் எங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுகிறது. எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தலைமுடி வெட்ட அங்குள்ளவர்கள் மறுக்கிறார்கள். இதனால் நாங்கள் பல மைல்கள் தூரம் பயணம் செய்து வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது” என்று கூறினார்.
திரைப்படங்களில் அல்லது வெப் தொடர்களில் ஒரு கதாபாத்திரமாக பாராட்டப்படுகிறோம் என்றாலும், நிஜ வாழ்க்கையில் இன்னும் சாதி அடிப்படையிலான பார்வை மாறவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். கல்வி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து நாடு முன்னேறி விட்டதாக பேசப்பட்டாலும், கிராமப்புறங்களில் இன்னும் இத்தகைய பழைய சாதி அமைப்புகள் வலுவாகவே நிலவி வருகின்றன என்றும், இந்த நிலைமை எப்போது மாறும் என்பது தெரியாமல் உள்ளதாகவும் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
