பூரி ஜகன்னாத் தெலுங்கு திரைப்படத் துறையில் தனித்துவமான இயக்குநராகப் பெயரெடுத்தவர். ஆக்ஷன் கதைக்களம் கொண்ட திரைப்படங்களை இயக்கி பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ள அவர், இதுவரை 35க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் உருவான ‘அப்பு’ (கன்னடம்), ‘போக்கிரி’, ‘பிஸ்னஸ்மேன்’ (தெலுங்கு) போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தன. இதில் ‘போக்கிரி’ திரைப்படம் தமிழிலும் மறுபதிப்பாக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக, விஜய் தேவரகொண்டா நடித்த ‘லைகர்’ திரைப்படத்தை அவர் இயக்கியிருந்தார். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. தற்போது, விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் ‘ஸ்லம்டாக்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், திரைப்படத் துறையில் பூரி ஜகன்னாத் 26 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
—
