விக்னேஷ் ராஜா இயக்கத்தில், தனுஷ், கே.எஸ். ரவிக்குமார், சுராஜ் வெஞ்சரமூடு, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கர’ திரைப்படம் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு முன்பு சரத்குமார் மற்றும் அசோக்செல்வன் நடித்த ‘போர்த்தொழில்’ திரைப்படத்தை இயக்கியவர் விக்னேஷ் ராஜா என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘கர’ திரைப்படம் குறித்து இயக்குநர் விக்னேஷ் ராஜா கூறுகையில், “இந்தக் கதையை நான் மற்றும் என் நண்பர் ஆல்பிரட் இணைந்து எழுதியுள்ளோம். சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதை உருவாக்கப்பட்டது. 1990களில் வேலூரில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை செய்தித்தாளில் படித்தபோது அது என்னை பாதித்தது. அந்தத் தாக்கத்திலிருந்து தான் ‘கர’ கதையை உருவாக்கினோம். பின்னர் அதை ராமநாதபுரம் பின்னணியில் நடைபெறும் கதையாக மாற்றியுள்ளோம்.
‘கர’ என்ற தலைப்புக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. என் நண்பரின் சித்தப்பாவின் பெயரும் ‘கர’ என்பதால், அதே பெயரைத் தேர்வு செய்தோம். மேலும், பல ஊர்களில் ‘கரசாமி’ என்ற பெயர் வழக்கில் இருப்பதும் காரணமாகும். இந்த திரைப்படத்தில் முதன்முறையாக தனுஷ் கிரே ஷேட், எதிர்மறை அம்சங்கள் கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் இந்தக் கதாபாத்திரம் இன்னும் கடுமையானதாக இருந்தது. ஆனால், திரைக்கதை படித்த தனுஷ் சில மாற்றங்களை பரிந்துரைத்தார். அதன் பேரில் அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை மாற்றியமைத்தோம்.
மமிதா பைஜு வழக்கமான கதாநாயகி கதாபாத்திரத்தில் இல்லாமல், கதையின் முக்கியமான பாத்திரங்களில் ஒருவராக நடித்துள்ளார். இந்தக் கதையில் நான்கு அல்லது ஐந்து கதாபாத்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. படப்பிடிப்பை ராமநாதபுரத்தில் நடத்த திட்டமிட்டிருந்தோம், ஏனெனில் அந்த பகுதியின் வறண்ட நிலப்பரப்பு கதைக்கு தேவையானதாக இருந்தது. ஆனால், நாங்கள் சென்ற நேரத்தில் அங்கு கடும் மழை பெய்ததால், சில காலம் காத்திருந்து பின்னர் படப்பிடிப்பை தொடங்கினோம்” என தெரிவித்துள்ளார்.
