இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா முதன்முறையாக மலையாள திரைப்படத்திற்காக இசையமைக்கிறார் என்ற தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் 1997ஆம் ஆண்டு வெளியான ‘அரவிந்தன்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் ஷங்கர் ராஜா, இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார்.
மலையாள நடிகராக அறியப்படும் ஜோஜு ஜார்ஜ், இயக்குநராக தனது முதல் முயற்சியாக ‘பனி’ திரைப்படத்தை 2024ஆம் ஆண்டு இயக்கியிருந்தார். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது தனது இரண்டாவது திரைப்படத்தை எழுதி இயக்கி வருகிறார். காவ்யா பிலிம் கம்பெனி தயாரிப்பில் உருவாகும் இந்தப் புதிய படத்திற்கு ‘பரிபாடி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ராஜீவ் ரவி ஒளிப்பதிவு மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக இணைந்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா தனது நீண்டகால இசைப் பயணத்தில் முதல் முறையாக மலையாள திரைப்படத்தில் பணியாற்றுவது, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
—
