இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக திகழும் தமன்னா, தற்போது தமிழில் இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் ஜோடியாக ‘புருஷன்’ திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதற்கிடையில் இந்தி திரைப்படங்களிலும் தொடர்ந்து பிஸியாக உள்ளார்.
திரைப்படங்களுடன் சேர்த்து தொழில்துறையிலும் கவனம் செலுத்தி, நகை விற்பனை நிறுவனத்தைத் தொடங்கி தொழில் அதிபராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ரசிகர்களைப் பற்றிய அவரது கருத்துகள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. அவர் கூறியதாவது, “ரசிகர்களே ஒரு கலைஞரின் மிகப்பெரிய சொத்து. அந்த வகையில் எனக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பது என் பாக்கியம்.
என்னைப் பார்த்து பலர் உணர்ச்சிவசப்படைந்து அழுவது உண்டு. சிலர் என் உருவத்தை பச்சைக் குத்தியிருப்பதும் உள்ளது. இதையெல்லாம் காணும்போது எனக்கும் உணர்ச்சி மிகுதி ஏற்படுகிறது. ரசிகர்களின் அன்பு என்னை அழவைக்கும் அளவுக்கு ஆழமாக உள்ளது என்பதை உணரும்போது பெருமையும் பரவசமும் ஏற்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
—
