நடிகர் ஆர்யா, வித்தியாசமான கதைகள் மற்றும் சவாலான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பதில் தனித்துவம் கொண்டவர். ‘நான் கடவுள்’, ‘மதராசப்பட்டினம்’, ‘அவன் இவன்’, ‘இரண்டாம் உலகம்’, ‘மகாமுனி’, ‘சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவரது திறமையான நடிப்பு பாராட்டப்பட்டுள்ளது. தற்போது அவர் ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
விஷ்ணு விஷால் நடித்த ‘எப்.ஐ.ஆர்’ திரைப்படத்தை இயக்கிய மனு ஆனந்த், ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஆக்ஷன் திரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன், காளி வெங்கட், ஜெயப்ரகாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கவுதம் ராம் கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் மேவரிக் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படம், வரும் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு சவாலான காட்சி குறித்து நடிகர் ஆர்யா பகிர்ந்துள்ளார். “இந்த தண்ணீருக்குள் எடுக்கப்பட்ட காட்சி என் சினிமா வாழ்க்கையில் மிகவும் கடினமான அனுபவமாக இருந்தது. 20 அடி ஆழமுள்ள நீச்சல் குளத்தில் குளிரை சமாளித்து, மூச்சை அடக்கி இந்த காட்சியை படமாக்கினோம். இது ஒரு ‘மிஷன் இம்பாசிபிள்’ அனுபவமாக இருந்தது. ஆனால், அந்த முயற்சி அனைத்தும் சிறப்பாக முடிந்தது,” என்று தெரிவித்துள்ளார்.
