‘கேஜிஎப், சலார்’ போன்ற வெற்றி திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி வரும் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர் கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பு காலத்தில் இயக்குநரும் நடிகரும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகின.
ஆனால், இவ்வாறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த படத்தை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தங்களது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் விளக்கம் வெளியிட்டுள்ளது. அதில், “படத்தின் காட்சி அமைப்புகள் அல்லது படப்பிடிப்பு நிறுத்தம் குறித்து பரவி வரும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை. வழக்கமான தயாரிப்பு இடைவேளையைத் தவிர, படம் திட்டமிட்டபடி சீராக முன்னேறி வருகிறது. சரிபார்க்கப்படாத தகவல்களை யாரும் நம்பவோ பரப்பவோ வேண்டாம். அதிகாரப்பூர்வ தகவல்கள் எப்போதும் எங்களிடமிருந்தே வெளியிடப்படும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இயக்குநர் பிரசாந்த் நீல் கடைசியாக இயக்கிய ‘சலார்’ திரைப்படத்தின் முதல் பாகம் 2023ஆம் ஆண்டு வெளியானது. கேஜிஎப் பாணியில் உருவான அந்த படம் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்பட்டது. அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்காமல், தற்போது ஜுனியர் என்டிஆர் நடித்துவரும் இந்த புதிய படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
