இயக்குநர் அட்லி இயக்கத்தில், இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில், அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் அவரது 22வது திரைப்படத்தின் தலைப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு ‘ராக்கா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த தலைப்பு அறிவிப்புடன் படத்தின் முதல் பார்வை போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி மற்றும் உருது உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் என்பதாலும், ‘ஜவான்’ திரைப்படத்திற்குப் பிறகு அட்லி இயக்கும் படம் என்பதாலும் இந்த படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
‘புஷ்பா 2’ மற்றும் ‘ஜவான்’ ஆகிய இரு படங்களும் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்த வெற்றி படங்களாகும். அதனால் இந்த புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் உயர்ந்துள்ளது. தமிழ் இயக்குநரான அட்லியுடன் அல்லு அர்ஜுன் இணைந்திருப்பது தெலுங்கு திரையுலகில் கூட ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படம் உலகளாவிய அளவில் வெளியிடப்பட உள்ளதால், மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியான முதல் பார்வை போஸ்டரில் அல்லு அர்ஜுன் வித்தியாசமான தோற்றத்தில், மனித முகத்துடன் மிருக கையை கொண்ட கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். ஆக்ஷன் மற்றும் ஃபேண்டஸி கலந்த இந்த திரைப்படத்தில் அவர் பல்வேறு கெட்அப்களில் தோன்றுவார் எனவும் கூறப்படுகிறது.
