நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ‘எப்.ஐ.ஆர்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் மனு ஆனந்த், தற்போது ‘மிஸ்டர் எக்ஸ்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஆக்ஷன் திரில்லர் வகையில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் சரத்குமார், மஞ்சு வாரியர், அனேகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதேபோல், கவுதம் ராம் கார்த்திக் இந்த திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் தோன்றுகிறார்.
இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பை திபு நிபுணன் தாமஸ் மேற்கொண்டுள்ள நிலையில், ஒளிப்பதிவை தன்வீர் மிர் செய்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய பல மொழிகளில் வெளியாகும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலேயே இப்படத்தின் முழு படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளன. ஸ்பை திரில்லர் தளத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆர்யா நடித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் வகையில், படக்குழு சமீபத்தில் ஒரு புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதன் படி, இந்த திரைப்படம் வருகிற 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
