கோடை விடுமுறையை முன்னிட்டு இந்த வாரம் முதல் புதிய திரைப்படங்கள் வெளியாவதற்கான சூழல் உருவாகியுள்ளது. தென்னிந்திய மொழிகளில் மூன்று முக்கியமான இளம் நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே வாரத்தில் வெளியாக இருப்பது சிறப்பம்சமாகும். இத்திரைப்படங்கள் தங்களது மூல மொழிகளைத் தாண்டியும் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் வெளியாக உள்ளன.
தமிழ் மட்டுமின்றி ‘டியூட்’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்ற பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகிறது. இதில் நடித்துள்ள கீர்த்தி ஷெட்டி மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோரும் தெலுங்கு திரையுலகில் பிரபலமானவர்கள் என்பதால், இப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கும் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மலையாளத் திரையுலகில் முன்னணி இளம் நடிகராக திகழும் டொவினோ தாமஸ் நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படமும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் நடித்துள்ள கயாடு லோஹர் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடமும் அறிமுகமானவர். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
அதேபோல், தெலுங்கு திரையுலகின் இளம் நடிகரான அடிவி சேஷ் நடித்துள்ள ‘டகாய்ட்’ திரைப்படமும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகிறது. இதில் மிருணாள் தாக்கூர் மற்றும் அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் இந்தியில் மட்டுமே மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
