ரூபா கொடுவாயூர் தெலுங்கு திரைப்படங்களின் மூலம் தனது நடிப்பு பயணத்தைத் தொடங்கி, யமகாதகி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகளில் பிணமாக நடித்திருந்தாலும், அவரது அர்ப்பணிப்பும் நடிப்புத் திறனும் பெரிதும் பாராட்டப்பட்டது. திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றபோதிலும், தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் தெலுங்கு திரையுலகிற்கு திரும்பினார். தற்போது, இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட நீளிரா திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்கிறார்.
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்தின் கீழ் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை சோமிதரண் இயக்கியுள்ளார். இதில் நவீன் சந்திரா, சனந்த், கபிலா வேணு, வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா, சிது குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கே இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் 3ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இது குறித்து ரூபா கொடுவாயூர் கூறுகையில், “யமகாதகி படத்திற்கு பிறகு நான் நடிக்கும் இரண்டாவது தமிழ் திரைப்படம் இதுதான். முதல் படத்தைப் போலவே இந்த திரைப்படமும் எனக்கு மிகவும் முக்கியமானதாகும். எனக்கு மட்டுமல்லாமல், தமிழ் ரசிகர்களுக்கும் இது ஒரு சிறப்பு படமாக இருக்கும் என்று நம்புகிறேன். பொதுவாக போர் என்றால் ஆயுதங்கள், துப்பாக்கிகள், போராட்டங்கள் என்பதே நமக்கு நினைவுக்கு வரும். ஆனால் அந்தச் சூழலில் வாழும் மக்களின் உணர்ச்சிகளும் முக்கியமானவை. அந்த உணர்ச்சிகளைப் பற்றி பேசும் முயற்சிதான் இந்த திரைப்படம்.
போர் நடைபெறும் சூழலில் ஒரு நீண்ட இரவில் நடைபெறும் சம்பவங்களே இந்தக் கதையின் மையமாக அமைந்துள்ளன. இந்த படம் ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். இந்த படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரம் குறித்து தற்போது எதையும் பகிர முடியாது. ஆனால் நான் எனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளேன் என்று நம்புகிறேன். இந்த படத்தில் நடித்திருப்பது எனக்கு கிடைத்த ஒரு பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். இந்த திரைப்படம் பார்த்த பிறகும், அது உங்கள் நினைவில் நீண்ட நேரம் நிலைத்திருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.
