நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன், தில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
‘நாடாளுமன்றம் நோக்கிச் செல்வோம்’ என்ற பேரணியின் போது, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவத்தால் மத்திய தில்லி பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியதுடன், கல்வீச்சு உள்ளிட்ட பதற்றமான நிகழ்வுகளும் பதிவாகின.
இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல், பல்வேறு திரையுலக பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடந்த நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்துகள் பதிவாகி வருகின்றன. இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதனும் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். “கேள்விகளுக்கு தடியடிகளால் பதில் சொல்லாதீர்கள்” என்று பதிவிட்ட அவர், தில்லியில் நடைபெற்று வரும் மாணவர், இளைஞர் போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
