இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘சென்னை 60028’. அவர் இயக்குனராக அறிமுகமான இந்த திரைப்படம் 2007-ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் சிவா, ஜெய், நிதின் சத்யா, விஜய் வசந்த், அரவிந்த், இளங்கோ ரவி உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று, வெங்கட் பிரபுவை நட்சத்திர இயக்குனராக உயர்த்தியது.
இதன் பின்னர் வெளியான ‘மாசு என்கிற மாசிலாமணி’, ‘பிரியாணி’ திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. இதையடுத்து, 2016-ஆம் ஆண்டு ‘சென்னை 60028 – இரண்டாம் இன்னிங்ஸ்’ படத்தை இயக்கிய அவர், பின்னர் மாநாடு திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பினார்.
பின்னர் முதல்வர் விஜய்யின் ‘தி கோட்’ படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டார். இந்த திரைப்படத்திற்குப் பிறகு அவரது அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், தற்போது ‘சென்னை 60028’ மூன்றாம் பாகத்தை உருவாக்கும் பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கான கதை விவாதங்கள் மலேசியாவில் அவரது குழுவினருடன் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், படப்பிடிப்பை விரைவில் தாய்லாந்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
