பாலிவுட் இயக்குநரான ஆதித்யா தார் இயக்கத்தில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் வசூலில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. கடந்த ஆண்டு பெரிதாக எதிர்பார்ப்பில்லாமல் வெளியான இந்த படத்தின் முதல் பாகம் சுமார் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதன் தொடர்ச்சியாக குறுகிய இடைவெளியில் வெளியான ‘துரந்தர் 2’ திரைப்படம் தற்போது அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டி வசூலில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. வெளியான இரண்டு நாட்களிலேயே 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து, பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த சூழலில், அடுத்ததாக ‘துரந்தர் 3’ உருவாகும் என்ற தகவல்கள் பரவிய நிலையில், இயக்குநர் ஆதித்யா தார் தனது கனவு திட்டமான ‘அஸ்வத்தாமா’ திரைப்படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. முன்பே திட்டமிடப்பட்டிருந்த இந்த படம், அதிக செலவினம் காரணமாக தாமதமாகி வந்தது. தற்போது ‘துரந்தர்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, இந்த படத்தை மேலும் பிரம்மாண்டமாக உருவாக்க அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திரைப்படத்தின் தயாரிப்பு செலவு 800 கோடி ரூபாயை தாண்டி, 1000 கோடி ரூபாய் வரை இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் கதாநாயகனாக மீண்டும் ரன்வீர் சிங் நடிக்க வாய்ப்பு இருப்பதாக பாலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. குறைந்த செலவில் மிகப்பெரிய வெற்றி கொடுத்த ஆதித்யா தார், இந்த மிகப்பெரிய முயற்சியில் எத்தகைய சாதனையை படைக்கப் போகிறார் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
