இயக்குனர் பிரியதர்ஷனின் 100வது படத்தில் கதாநாயகனாக நடிக்கும் மோகன்லால்!

சினிமா துறையில் கடந்த 42 ஆண்டுகளாக இயக்குநராக செயல்பட்டு வரும் மலையாள இயக்குநர் பிரியதர்ஷன், தமிழில் ‘கோபுர வாசலிலே’, ‘சினேகிதியே’, ‘லேசா லேசா’, ‘காஞ்சிவரம்’, ‘நிமிர்’, ‘அப்பத்தா’ போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்தி திரையுலகிலும் பல படங்களை இயக்கியுள்ள அவர், தற்போது அக்ஷய் குமார் நடிப்பில் ‘பூத் பங்களா’ என்ற நகைச்சுவை திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும், அக்ஷய் குமார் மற்றும் சைப் அலி கான் இணைந்து நடித்த ‘ஹைவான்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இது அவரது 97வது திரைப்படமாகும். தொடர்ந்து, அவரது 98வது திரைப்படத்தில் பங்கஜ் திரிபாதி, அன்னு கபூர், சவுரப் சுக்லா ஆகியோர் நடித்துள்ளனர்.

1984ஆம் ஆண்டு ‘பூச்சாக்கொரு மூக்குத்தி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், இதுவரை மொத்தம் 99 திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவரது முதல் படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார். அதன் பின்னர் மோகன்லாலை மையமாகக் கொண்டு ‘மின்னாரம்’, ‘தென்மாவின் கொம்பத்’, ‘காலாபாணி’, ‘ஒப்பம்’ போன்ற பல வெற்றி படங்களை வழங்கியுள்ளார்.

தமிழில் நடிகர் பிரகாஷ் ராஜை வைத்து இயக்கிய ‘காஞ்சிவரம்’ திரைப்படத்திற்காக சிறந்த படம் மற்றும் சிறந்த தயாரிப்பாளர் பிரிவுகளில் தேசிய விருதுகளை பெற்றார். இந்திய சினிமாவிற்கு சிறப்பான பங்களிப்பு செய்த இயக்குநர்களில் ஒருவராக விளங்கும் பிரியதர்ஷனுக்கு மத்திய அரசு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கவுரவித்துள்ளது. சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது முதல் திரைப்படத்தில் நடித்த மோகன்லால், தனது 100வது திரைப்படத்திலும் கதாநாயகனாக நடிப்பார் என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் இணையும் புதிய படம் இசையை மையமாகக் கொண்டதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது பிரியதர்ஷன் தனது 100வது திரைப்படத்தை இயக்கத் தயாராகியுள்ளார். ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கிறார். தனது முதல் படத்தின் கதாநாயகனைத் தான் 100வது திரைப்படத்திலும் இயக்கும் இயக்குநராக புதிய உலக சாதனையை உருவாக்கும் நிலையில் இருப்பது ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading