விடுதலை’ திரைப்படத்தில் எளிமையான தோற்றத்திலும், ‘ஹார்ட்ஸ்பாட் 2’ படத்தில் நவீனமான கதாபாத்திரத்திலும் நடித்த பவானி ஸ்ரீ, தற்போது ஸ்ரீசெந்தில் இயக்கும் ‘காளிதாஸ் 2’ படத்தின் மூலம் முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இதுகுறித்து அவர் பகிர்ந்துகொண்டபோது, “இந்தக் கதாபாத்திரத்திற்காக என்னை அணுகியபோது நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். இந்த வேடத்திற்கு நான் பொருந்துவேனா என சந்தேகம் தெரிவித்தேன். அதற்கு படக்குழுவினர் பல்வேறு உதாரணங்களை காட்டி, இப்படிப்பட்ட பின்னணியில் இருந்து பலர் போலீஸ் அதிகாரிகளாக உருவாகியுள்ளனர் என்று விளக்கினர். அதன் பிறகு நம்பிக்கையுடன் இந்த வேடத்தில் நடித்தேன்” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “இந்த படத்தில் பரத் ஹீரோவாக நடித்துள்ளார். நான் சிறுவயதிலிருந்தே அவருடைய பாடல்களையும் படங்களையும் விரும்பி ரசித்து வந்தேன். மற்ற நடிகர்களுக்கும் உதவி செய்து, படம் சிறப்பாக உருவாக பல கருத்துகளை பகிர்கிறார்; அது மிகவும் நல்ல விஷயம். 25 ஆண்டுகளுக்கு பிறகு ‘பூவே உனக்காக’ சங்கீதா இந்த படத்தின் மூலம் மீண்டும் நடிக்கிறார். அவர் இன்றும் அதே அழகுடன் உள்ளார். அவருடன் இணைந்து நடித்தது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது.
மேலும், இந்த படத்தில் இன்னொரு ஹீரோவாக அஜய் நடித்துள்ளார். நாங்கள் இருவரும் ஒன்றாக நடிப்பு பயிற்சி பெற்றவர்கள். பின்னர் அவர் வெளிநாடு சென்றிருந்தார்; தற்போது மீண்டும் சினிமாவிற்கு திரும்பி நடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இசை குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும் பாடகி அல்ல. இருந்தாலும் பல மேடைகளில் பாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். ‘காளிதாஸ்’ முதல் பாகம் போலவே, இந்த இரண்டாம் பாகமும் பெரிய வெற்றியைப் பெறும்” என்று தெரிவித்தார்.
