நான் ஏன் இந்த சினிமா பயணத்தைத் தொடங்கினேன் என்பதை நினைவூட்டியது ‘யூத்’ திரைப்படம் – கென் கருணாஸ் டாக்!

நடிகர் கருணாசின் மகனான கென், ‘அசுரன்’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில், தற்போது ‘யூத்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும், இயக்குநராகவும் புதிய அடையாளத்தை உருவாக்கியுள்ளார். இன்று இந்த திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், அவர் தனது சமூக வலைத்தளத்தில் உணர்ச்சிப் பூர்வமான பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது: சினிமாவை நேசிக்கத் தொடங்கிய நாளிலிருந்து, வாழ்க்கையின் மற்ற எல்லா விஷயங்களும் மெதுவாக இரண்டாம் இடத்திற்கு மாறிவிட்டன. அது ஒரு சாதாரண விருப்பமாக மட்டும் இல்லாமல், என் வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. எனக்கு தற்போது 24 வயதாக இருந்தாலும், என் சிறுவயதிலிருந்து இன்று வரை என்னுடன் தொடர்ந்து இருந்த ஒரே ஒன்று சினிமாதான். எந்த சூழ்நிலையிலும் அது என்னை விட்டு விலகவில்லை. ‘யூத்’ திரைப்படத்தில் இனி வேலை செய்ய முடியாது என்பதே எனக்கு நம்ப முடியாத உணர்வாக உள்ளது.

இத்தனை நாட்களாக அந்த திரைப்படம் என் சொந்த குழந்தையைப் போலவே இருந்தது. தினமும் உறங்கும் வரை அதைப் பற்றியே சிந்தித்து வந்தேன். ஒரு கதாநாயகனாக அழகான ஒரு கதையில் வாழ்ந்த அனுபவத்தையும், ஒரு இயக்குநராக எனக்கான பாதையை கண்டறிந்த திருப்தியையும் இந்தப் படம் அளித்தது. ஒவ்வொரு காட்சியும் எனக்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது. சில நாட்களில் இந்தப் படம் என்னை உடைத்தது; சில நாட்களில் என்னை உருவாக்கியது.

ஆனால் எப்போதும் நான் ஏன் இந்த சினிமா பயணத்தைத் தொடங்கினேன் என்பதை நினைவூட்டியதே இந்த திரைப்படம். இந்தப் படத்தை பார்ப்பவர்களை மனதில் கொண்டு தான் நான் உருவாக்கினேன். நீங்கள் எங்கு சிரிப்பீர்கள், எங்கு என்னுடன் இணைவீர்கள், எப்படி உணர்வீர்கள் என்பதனை எண்ணிக்கொண்டே இந்த படைப்பை உருவாக்கினேன். எனக்கான ‘யூத்’ திரைப்படம் இப்போது உங்களுடையதாக மாறுகிறது. அதை கவனமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். நான் அதை நேசித்ததை விட அதிகமாக நீங்கள் நேசிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading