இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு சமீபத்தில் ‘அந்தோனி’, ‘சல்லியர்கள்’ போன்ற திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது ‘நீளிரா’ என்ற புதிய திரைப்படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் பாலு மகேந்திராவின் முன்னாள் உதவியாளரான சோமிதரன் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பும் இலங்கைத் தமிழர்களை மையமாகக் கொண்ட ஆவணப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படத்தில் நவீன் சந்திரா, சனத், ரூபா கொடுவாயூர், கபிலா, விது, சிது குமரேசன், வின்சென்ட், ரோஹித் கோகடே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டோன் பென்ச் நிறுவனம் சார்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஸ்பிரிட் நிறுவனம் சார்பில் நடிகர் ராணா டகுபதி ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகின்றனர்.
படம் குறித்து இயக்குநர் சோமிதரன் கூறுகையில், “பாலு மகேந்திராவிடம் பணியாற்றிய காலத்தில், நான் இலங்கையில் பிறந்தவனாக இருந்தாலும் அங்குள்ள மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படம் உருவாக்க முடியவில்லை. ‘நீயாவது ஒரு படம் இயக்கும்போது, நம் மக்களின் வாழ்க்கையை முதலில் பதிவு செய்’ என்று அவர் கூறியிருந்தார். அவரது ஆசையை நிறைவேற்றவே இந்தப் படத்தை இயக்கியுள்ளேன்.
கணவனுக்காக மனைவி காத்திருக்கும் நீண்ட இரவை சங்க இலக்கியத்தில் ‘நீளிரா’ என்று குறிப்பிடுகின்றனர். அதுவே இந்தப் படத்தின் மையக் கருத்தாக இருப்பதால், அதையே தலைப்பாகத் தேர்ந்தெடுத்தேன். பொதுவாக யுத்தம் என்றால் இரத்தப்பாய்ச்சல் மட்டுமே நடக்கும் என பலர் நினைக்கிறார்கள். ஆனால் யுத்த சூழலிலும் காதல் மலர்கிறது, திருமணங்கள் நடைபெறுகின்றன. ஒரு குடும்பத்தில் திருமணத்திற்காக அனைவரும் கூடும் நேரத்தில் யுத்தம் வெடிக்கும்போது, அந்த வீட்டில் என்ன நிகழ்கிறது, அந்த சிக்கல்களை சமாளித்து திருமணத்தை எவ்வாறு நடத்துகின்றனர் என்பதே இந்தப் படத்தின் கதை” என்று தெரிவித்துள்ளார்.
