தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராகப் பரவலாக அறியப்படும் யோகி பாபு, நகைச்சுவை வேடங்களில் மட்டுமன்றி பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துத் தனது திறமையை நிரூபித்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கெணத்த காணோம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, பொதுமக்கள் மத்தியில் சிறப்பான கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து, யோகி பாபு அறிமுக இயக்குநரான ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். மேலும், காளி வெங்கட், மைனா நந்தினி, அருள்தாஸ், சென்றாயன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் யோகி பாபுவின் 300வது திரைப்படமாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டுள்ளது. அந்தக் காணொளியில், யோகி பாபு ஓட்டிச் செல்லும் வாகனத்தை சிலர் திருடிச் செல்லும் சம்பவம் இடம்பெறுகிறது. அந்த வாகனத்தை மீட்டெடுக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகளும், அதன் பின்னர் நடைபெறும் சம்பவங்களும் தான் இந்த திரைப்படத்தின் மையக் கதையாக உருவாகியுள்ளது.
