கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் ‘சேயோன்’. மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்புக்கு இடையே சிறிது நேரம் கிடைத்த நிலையில், சிவகார்த்திகேயன் மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள பிரபல ஜிகர்தண்டா கடை ஒன்றுக்கு சென்றுள்ளார். அவர் அங்கு வந்த தகவல் பரவியதும், சுற்றுப்பகுதியில் இருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் அவரைப் பார்க்க திரண்டனர்.
கூடியிருந்த ரசிகர்களை சந்தித்த சிவகார்த்திகேயன், எந்தவித பந்தாவும் இல்லாமல் அவர்களுடன் அன்பாக உரையாடினார். அப்போது ஒரு குழந்தையை பாசத்துடன் முத்தமிட்டு மகிழ்ந்த அவர், தன்னை பார்க்க வந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவருக்கும் தனது சொந்த செலவில் ஜிகர்தண்டா வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த எளிமையான செயல் அங்கிருந்த ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
