‘தி லைப்ரேரியன்’ கதாபாத்திரம் டிமான்ட்டி காலனி -3 படத்தில் மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும் – இயக்குனர் அஜய் ஞானமுத்து!

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடித்த ‘டிமான்ட்டி காலனி’ திரைப்படம் வெளியானபோது மக்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக வெளியான இரண்டாம் பாகமும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது இந்தத் தொடரின் மூன்றாம் பாகம் தயாராகி உள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும், ஆன்ட்டி யாஸ்கெலைனன், ஜி.எம். குமார், முத்துக்குமார், ஸ்ரீகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், கதிர், ஆஷிக் ஹுசைன், சர்ஜனோ கலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளதுடன், சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவை மேற்கொண்டு வருகிறார்.

பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சுதன் சுந்தரம், டங்கல் தொலைக்காட்சி, ஆர்டிஎக்ஸ் மீடியா மற்றும் ஞானமுத்து பட்டறை ஆகியவை இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகின்றன. இந்தப் படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரமாக ‘தி லைப்ரேரியன்’ எனப்படும் மர்மமான பாத்திரத்தில் நடிகர் குரு சோமசுந்தரம் நடித்துள்ளார். ‘டிமான்ட்டி காலனி’ தொடரில் இந்த லைப்ரேரியன் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் காணொளி சமீபத்தில் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதுகுறித்து இயக்குநர் அஜய் ஞானமுத்து கூறுகையில், ‘தி லைப்ரேரியன்’ என்ற கதாபாத்திரம் இந்தத் தொடரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் சுவாரஸ்யமானதும் ஆகும். பழிவாங்கும் எண்ணத்தை மையமாகக் கொண்ட இந்த எதிர்மறை கதாபாத்திரத்திற்கு, வெளிப்படையாக சாதாரண மனிதராகத் தோன்றியும் எந்த நேரத்திலும் கொடூரமாக மாறக்கூடிய நடிகர் தேவையாக இருந்தார். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடியவராக குரு சோமசுந்தரம் இந்தப் படத்தில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. அவரது நடிப்பு இந்தப் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading