இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் நடிக்க இருக்கும் புதிய திரைப்படம் ‘அரசன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
வடசென்னை பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி, கிஷோர், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேங்க்ஸ்டர் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இதில் நடிகர் சிலம்பரசன் ‘மதுரை டைகர்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அந்த கதாபாத்திரத்துடன் தொடர்புடைய புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.இந்நிலையில் தற்போது சென்னையில் ‘அரசன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் நகர்ப்புற காட்சிகள் மற்றும் அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 35 நாட்கள் இந்த கட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
