நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க இருக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் ஒரு முன்னோட்ட வீடியோவுடன் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘சேயோன்’ என்பது குறிஞ்சி நிலத்தின் கடவுளாகக் கருதப்படும் முருகரை குறிக்கும் ஒரு பெயராகும். ‘சிவந்த தலைவன்’ என்ற பொருளை தரும் இந்த பெயர், அழகு, ஞானம் மற்றும் வீரத்தால் சிறந்து விளங்கும் சிவந்த நிறமுடையவரை குறிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பெயரே படத்தின் கதைக்கான அடிப்படையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்த திரைப்படத்தில் முருகர் மற்றும் நாட்டுப்புற தெய்வமான விருமாண்டி ஆகிய இரு சக்திவாய்ந்த கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு கதை நகரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ‘சேயோன்’ கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்றும், ‘விருமாண்டி’ கதாபாத்திரத்தில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளன.
2004ஆம் ஆண்டு கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்த ‘விருமாண்டி’ திரைப்படம் இன்றளவும் ரசிகர்களால் பேசப்படும் முக்கியமான படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அந்த நிலையில், ‘சேயோன்’ திரைப்படத்தில் கமல்ஹாசன் மீண்டும் ‘விருமாண்டி’ கதாபாத்திரத்தில் நடித்தால் அது கதைக்கு மிகுந்த பொருத்தமாகவும், திரைப்படத்திற்கு கூடுதல் வலிமையையும் தரும் என்று இயக்குநர் சிவகுமார் முருகேசன் நினைப்பதாக கூறப்படுகிறது.
