பார்க்கிங்’ திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் எம். எஸ். பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். தற்போது அவர் பல திரைப்படங்களில் முக்கியமான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்ந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சமீபத்தில் வழங்கிய ஒரு நேர்காணலில் எம். எஸ். பாஸ்கர் தனது தனிப்பட்ட கொள்கைகள் குறித்து பேசினார். அவர் கூறுகையில், “சினிமாவில் நான் கடைபிடித்து வரும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இரட்டை அர்த்த வசனங்களை நான் ஒருபோதும் பேச மாட்டேன். அதேபோல், எந்த மதத்தையும் அவமதிக்கும் வகையில் பேசுவதோ, கடவுள் இல்லை என்று கூறுவதோ எனக்கு பொருந்தாத விஷயங்கள். ஒருமுறை ஒரு திரைப்படத்தில் ‘புறம்போக்கு’ என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். அது சாதாரணமாக இருந்தாலும், அதை கெட்ட வார்த்தையாக மாற்றியமைத்துவிட்டோம் என்பதை பின்னர் உணர்ந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “ஒருநாள் ஒரு சிறுவன் மற்றொருவரை அந்த வார்த்தையால் திட்டுவது எனக்கு கண்ணில் பட்டது. அப்போது அது என்னை மிகவும் பாதித்தது. அதன்பிறகு நான் எந்தவித கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தக்கூடாது என்று முடிவு செய்தேன். அந்த முடிவை இன்று வரை தொடர்ந்து கடைபிடித்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
