நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ‘ஹேப்பிராஜ்’ திரைப்படம் வரும் மார்ச் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குநர் மரியா இயக்கியுள்ளார். இப்படம் குறித்து சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஜி.வி. பிரகாஷ், இந்த படத்தின் தயாரிப்பு ஆரம்ப கட்டத்தில் தான் சந்தித்த எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசும்போது, “புதுமுக இயக்குநர் மற்றும் புதுமுக தயாரிப்பாளர் என்பதால் ஆரம்பத்தில் எனக்கு சிறிது பயம் இருந்தது. குறிப்பாக அந்த ஏரியாவை விற்று கொடுக்க வேண்டும், சாட்டிலைட் உரிமைகள், டிஜிட்டல் உரிமைகள் போன்றவற்றை விற்பனை செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பார்களோ என்ற எண்ணமும் இருந்தது. ஆனால் அவர்கள் எந்த அழுத்தமும் இல்லாமல் திட்டமிட்ட முறையில் படத்தை சிறப்பாக முடித்து வைத்தார்கள். தற்போது அனைத்து உரிமைகளையும் முறையாக விற்று, லாபத்துடன் இந்த படத்தை வெளியிட தயாராகி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இசையமைப்பாளராக பணியாற்றிய மற்றொரு யூத் படம் இந்த வாரம் வெளியாக உள்ளது என்றும், அந்த திரைப்படமும் வணிக ரீதியாக நல்ல நிலையை எட்டியுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இரண்டு திரைப்படங்களும் இளைஞர்களை கவரும் விதமாக, ஜாலியான கதை அம்சத்தில் உருவாகியுள்ளதால், இரண்டிற்கும் வியாபாரம் சிறப்பாக நிறைவு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
